by Bella Dalima 22-02-2020 | 4:39 PM
Colombo (News 1st) மத சுதந்திரம் குறித்து பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
நாளை மறுதினம் (24) இந்தியா செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, இந்தியாவில் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா, அமெரிக்கா ஆகியன தமக்கிடையே பகிர்ந்துகொள்ளும் ஜனநாயகம் மற்றும் மத சுதந்திரம் போன்ற விடயங்கள் குறித்து நரேந்திர மோடியுடம் டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடவுள்ளதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி கூறியுள்ளார்.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை முன்னிட்டு தாஜ்மஹால் வளாகத்தை சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தாஜ்மஹாலை சுற்றியுள்ள மதில்கள், பூங்கா பகுதிகளில் துப்புரவுப் பணிகள் இடம்பெறுகின்றன.
தமது இந்திய விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குஜராத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.