மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

மகா சிவராத்திரி தினம்: ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

by Staff Writer 21-02-2020 | 5:51 PM
Colombo (News 1st) மகா சிவராத்திரி தினத்தில் இலங்கைவாழ் இந்துக்களுடன் தாமும் மகிழ்ச்சியுடன் இணைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்து சமய பஞ்சாங்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி தினத்தில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சமயக்கிரியைகளின் மூலம் துர்குணங்களில் இருந்து விலகி உளத்தூய்மையை பெற்றுக்கொள்ள முடியுமென்பது நம்பிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். பல்வேறு சிக்கல்கள், முரண்பாடுகளுக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்லும் இன்றைய உலகில், மனிதனுக்கு உள அமைதியைத் தருவது சமயம் ஆகும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் காணப்படுகின்ற விழாக்கள் மக்களிடையே ஒற்றுமையை மாத்திரமின்றி பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மனிதர்களிடையே நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஏற்படுத்தக்கூடிய வழிகளைக் காட்டும் தினமாகவும் மனித குலத்தின் அமைதிக்கும் நலனுக்குமான நாள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.