எயார்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற ஊழல் வௌிக்கொணர்வு

by Staff Writer 21-02-2020 | 8:59 PM
Colombo (News 1st) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் 13 விமானங்கள் நீக்கப்பட்டு, அதற்காக 14 புதிய விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. A330 ரக 6 விமானங்களையும் A350 ரக 4 விமானங்களையும் பிரான்ஸின் எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதற்கு ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. பிரித்தானியாவின் பாரிய மோசடி தொடர்பான விசாரணை அலுவலகம் முன்னெடுத்த விசாரணையில் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு இடையில் இடம்பெற்ற மற்றுமொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்கள் வௌியாகின. அந்த வௌிக்கொணர்விற்கு அமைய, ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் பெயரில் ப்ரூனேவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் இந்த கொடுக்கல் வாங்கலில் தொடர்புபட்டுள்ளது. இதன்போது, எயார்பஸ் நிறுவனம் Biz Solution எனப்படும் ப்ருனே நிறுவனத்திற்கு 16.84 மில்லியன் அமெரிக்க டொலரை இலஞ்சமாகக் கொடுப்பதற்கு வாக்குறுதியளித்ததுடன், அதில் இரண்டு மில்லியன் செலுத்தப்பட்டது. பிரித்தானியாவில் இந்த விடயங்கள் வௌிவந்ததையடுத்து, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சாட்சியங்களை சமர்ப்பித்தது. அந்த அறிக்கைக்கு அமைய, மனைவிக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயரில் சிங்கப்பூரிலுள்ள கணக்கிற்கு எயார்பஸ் நிறுவனம் அனுப்பியதாகக் கூறப்பட்டும் நிதியை கபில சந்திரசேன சில சந்தர்ப்பங்களில் அவுஸ்திரேலியாவிலுள்ள தமது கணக்கிற்கு மாற்றியுள்ளார். பிரபல வர்த்தகரான நிமல் பெரேராவின் நிறுவனம் மற்றும் இரு சகோதரர்கள் பணிப்பாளர்களாக பதவி வகிக்கும் S.L.Agro எனப்படும் மற்றுமொரு நிறுவனத்தின் இலங்கை வங்கிக் கணக்குகளுக்கு சிங்கப்பூர் கணக்கிலிருந்து நிதி அனுப்பப்பட்டுள்ளதாக, விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இறுதி வழக்குத் தவணையின் போது சுட்டிக்காட்டியது. கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற கோப் குழு தொடர்ச்சியாக விசாரணைகளை நடத்தியது. கொடுக்கல் வாங்கலுக்கான வர்த்தகத் திட்டத்தை Seabury எனப்படும் ஆலோசனை நிறுவனமொன்று தயாரித்ததாக கோப் குழுவில் தெரியவந்தது. அந்த நிறுவனத்திடமிருந்து சேவையைப் பெற்றுக்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை என கோப் குழு விசாரணையூடாக தெரியவந்தது. எயார்பஸ்களை கொள்வனவு செய்வதற்காக உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை பின்பற்றப்படவில்லை என்பதுடன், பாரிய பிரச்சினையை தோற்றுவித்த கொடுக்கல் வாங்கலை கடந்த அரசாங்கம் இரத்து செய்தது. அதற்காக 98 மில்லியன் டொலர் செலவிடப்பட்டது. போதியளவு சொத்துக்கள் நிறுவனத்திடம் இல்லாத நிலையில், இந்த விமான கொள்வனவிற்கான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கோப் குழு நேற்று முன்தினம் (19) இரவு கூடிய சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.