by Staff Writer 21-02-2020 | 3:21 PM
Colombo (News 1st) முகத்தை முழுமையாக மறைத்து புர்கா அணிவதை உடனடியாக தடை செய்யுமாறும், இன மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகளை பதிவு செய்வதை இடைநிறுத்துமாறும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைத்துள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சமூகத்தில் எழுந்த 14 விடயங்களுக்கான தீர்வை முன்வைக்கும் வகையில் இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஏற்கனவே பல நாடுகள் புர்காவை தடை செய்துள்ளதாகவும் சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைமையகமும் கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து புர்காவிற்கு தடை விதித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரேனும் பொது இடத்தில் முகத்தை முழுமையாக மறைத்திருக்கும் வேளை அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அதனை நீக்குவதற்கு இணங்காவிட்டால் அவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கட்சிப் பதிவை இடைநிறுத்துவதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதன் ஊடாக பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, மதரசா பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை மூன்று வருடங்களுக்குள் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்க வேண்டும் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு பரிந்துரைத்துள்ளது.