புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை

புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை

புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை

எழுத்தாளர் Staff Writer

21 Feb, 2020 | 7:07 pm

Colombo (News 1st) புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா சென்றிருந்தார்.

இந்தியா இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு குறிப்பிட்டார்.

இந்திய எக்ஸிம் வங்கியின் (Exim Bank) நிதி உதவியுடன் காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கள ஆய்வின் பின்னர் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் சுமார் நான்கு வருடங்கள் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்தார்.

இதன் பின்னர் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் கப்பல் சேவையை முன்னெடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக நடவடிக்கைகளை காங்கேசன்துறை துறைமுகத்தினூடாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் பிரியந்த மயாதுன்னே சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்