கொரோனாவால் தென் கொரியாவில் முதலாவது உயிரிழப்பு

தென் கொரியாவில் கொரோனா வைரஸால் முதலாவது உயிரிழப்பு பதிவு

by Bella Dalima 20-02-2020 | 5:56 PM
Colombo (News 1st) தென் கொரியாவில் கொரோனா வைரஸினால் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அங்கு கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளதுடன், புதிதாக 53 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக தென் கொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை திறக்க வேண்டாமென அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் முதலில் ஏற்பட்ட இடமாக ஹூபெய் மாகாணம் காணப்படும் நிலையில், அங்கு வைரஸ் தாக்கம் இதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நாளை வரை வேலைத்தளங்கள் மற்றும் பாடசாலைகளை திறக்க வேண்டாமென அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள 621 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே சீனாவிற்கு வௌியே அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உறுதிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையில், குறித்த கப்பலில் இருந்த 150-இற்கும் மேற்பட்ட அவுஸ்திரேலியர்கள் 2 வார கால தனிமையின் பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஹூபெய் மாகாணத்தில் கடந்த மூன்று வாரங்களில் இல்லாதளவிற்கு, புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் குறைவடைந்துள்ளது. ஹூபெய் மாகாணத்தில் நேற்று முன்தினம் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,693 ஆக பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம் 349 பேர் மட்டுமே புதிதாக தொற்றுக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து இதுவரையில் பதிவாகிய மிகக்குறைந்த எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே , சீனாவில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,121ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 74,60-க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.