இடைக்கால கணக்கறிக்கை திருத்தம் மீளப்பெறப்பட்டது

இடைக்கால கணக்கறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிக்கும் திருத்தம் மீளப்பெறப்பட்டது

by Staff Writer 20-02-2020 | 9:35 PM
Colombo (News 1st) இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்காக கடந்த அரசாங்கம் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கை மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரிப்பதற்காக அரசாங்கம் சமர்ப்பிக்கவிருந்த திருத்தங்கள் இன்று பாராளுமன்றத்தில் மீளப்பெறப்பட்டன. இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் அவசரக்கூட்டத்தின் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வருடத்திற்காக வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாததால், 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி, இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்காக 757.6 பில்லியன் ரூபாவிற்கான இடைக்கால கணக்கறிக்கையை அப்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த இடைக்கால கணக்கறிக்கையில் 721 பில்லியன் ரூபாவை கடனாக பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 757.6 பில்லியன் ரூபாவை மேலும் 367 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் இன்று திட்டமிட்டிருந்தது. 721 பில்லியனாகக் காணப்பட்ட கடன் பெறுவதற்கான எல்லையை 1088 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கவும் அரசாங்கம் உத்தேசித்திருந்தது. இது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக, இன்று முற்பகல் பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான போது உரிய நேரத்திற்கு முன்னதாகவே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துமாறு சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன வேண்டுகோள் விடுத்தார். இதற்கமைய, பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.