ஆட்கொல்லி கொரோனா: பலி எண்ணிக்கை 2000 ஐ அண்மித்தது

ஆட்கொல்லி கொரோனாவின் தாக்கத்தில் பலி எண்ணிக்கை 2000 ஐ அண்மித்தது

by Chandrasekaram Chandravadani 19-02-2020 | 11:27 AM
Colombo (News 1st) கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை அண்மித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 132 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தற்போது குறைவடைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹூபேயின் நாளாந்த தரவுகளின் பிரகாரம், மாகாணத்தில் நேற்றைய தினத்தில் 1,693 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் சீனாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தநிலையில், சீனாவின் வுஹானிலுள்ள வைத்தியசாலையின் பணிப்பாளர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சீனாவை தவிர ஏனைய உலக நாடுகளில் 827 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்குள், 40 ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் 29 அமெரிக்க வலய நாடுகளும் கொவிட் 19 வைரஸினால் பாதிக்கப்படக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வுகூறியுள்ளது.