அன்னச் சின்னத்தில் களமிறங்கும் ஐ.தே.க தலைமையிலான கூட்டமைப்பு

by Staff Writer 19-02-2020 | 8:52 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பின் தேர்தல் சின்னம் தொடர்பில் இன்றும் வாதப் பிரதிவாதம் ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிட முடியுமா என தேர்தல்கள் ஆணைக்குழுவில் மீண்டும் வினவப்பட்டது. இன்று காலை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எழுந்த சர்ச்சையை அடுத்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு செல்வதற்கு முன்னர் சிறிகொத்தவில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பின்னர், யானையில் போட்டியிடுவதாக இருந்தால் புதிய கூட்டமைப்பிற்கு யானையை வழங்க வேண்டும். புதிய கூட்டமைப்பிற்கு அதனை வழங்க முடியாத நிலைமையே காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். சஜித் பிரேமதாசவின் தலைமையிலேயே கூட்டமைப்பு போட்டியிடும் எனவும் அன்னம் சின்னத்தை வழங்கத் தீர்மானித்ததாகவும் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார். அரசாங்கம் கலைக்கப்பட்டவுடன் அன்னத்தை கூட்டமைப்பின் சின்னமாக்க முயற்சிக்கப் போவதாக மங்கள சமரவீர கூறினார்.