முதலீட்டிற்கு பொருத்தமான நாடாக மாற்றுவதே இலக்கு

முதலீட்டிற்கு மிகப்பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே இலக்கு: ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 19-02-2020 | 4:02 PM
Colombo (News 1st) முதலீட்டிற்கு மிகப்பொருத்தமான நாடாக இலங்கையை மாற்றுவதே தமது இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான பொறிமுறையொன்றுக்கு சட்டரீதியிலான பின்புலத்தை உருவாக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள், ஒழுங்கு விதிகளின் நடைமுறைக்கேற்றவாறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமெனவும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனிடையே, அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் போது ஏற்படும் காலதாமதங்களை இயன்றளவு குறைத்துக்கொள்வதோடு வௌிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். வட மாகாண நீரியல் பூங்கா தொடர்பான செயற்றிட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.