ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2020 | 3:11 pm

Colombo (News 1st) ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/ 1 தீர்மானத்தில் இருந்து விலகுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்தமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கியமை மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை படையினர் மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை அந்த பிரேரணையில் அங்கீகரிக்கப்பட்டிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவத் தளபதி மனித உரிமைகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டாலும் அந்த குற்றங்கள் என்னவென்பது எவருக்கும் தெரியாது என பிரதமர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை தொடர்பில் அரசாங்கம் அமெரிக்காவிற்கு கண்டனத்தை தெரிவிப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானத்திற்கு பிரித்தானியா, வடக்கு அயர்லாந்து, மெசிடோனியா, மொன்டி நீக்ரோ ஆகிய நாடுகளும்  இணை அனுசரணை வழங்கியிருந்தன.

ஒன்பது விடயங்களுக்கு இந்த தீர்மானத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்கள் அங்கம் வகிக்கும் கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பது அதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் கலப்பு நீதிமன்றமொன்றை ஸ்தாபிக்க முடியாது என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் வௌிவிவகார அமைச்சராக இருந்த திலக் மாரப்பன வலியுறுத்தினார்.

30/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என பிரித்தானியா தலைமையில் இலங்கையின் இணை அனுசரணையில் நிறைவேற்றப்பட்ட 40/1 தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்