உள்நாட்டுக் கைத்தொழில் துறையை மேம்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

by Staff Writer 18-02-2020 | 11:11 AM
Colombo (News 1st) தடைகளை நீக்கி உள்நாட்டுக் கைத்தொழில் துறையைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கைத்தொழில்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சுக்களுக்கான செயலணியுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார்வாகன உதிரிப்பாகங்கள், உலோக விற்பனையாளர்கள், பாதணிகள், தோல்பொருட்கள், ஆடை, மருத்துவப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், மின்சார உபகரணங்கள், தளபாடம் மற்றும் அழகுசாதனப் பொருள் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட கைத்தொழில்துறை சார்ந்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான வரி மற்றும் சுங்க நடவடிக்கைகளின்போது எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பில் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக உரிய தௌிவுடன் முதலீட்டு வாய்ப்புகளுக்கு உதவுவது அனைத்து தரப்பினரதும் பொறுப்பு என இதன்போது ஜனாதிபதி கூறியுள்ளார்.