நியாயமான அரசியல் தீர்வைக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

நியாயமான அரசியல் தீர்வைக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

நியாயமான அரசியல் தீர்வைக் கோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

எழுத்தாளர் Staff Writer

18 Feb, 2020 | 2:32 pm

Colombo (News 1st) நியாயமான அரசியல் தீர்வொன்றை அடைய முடியாது போனால், அது பாரிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வௌிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பெராவுடனான சந்திப்பின்போதே இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று (17) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் யாப்பு விடயத்தில் தற்போதைய அரசாங்கம் வேறு சிந்தனையைக் கொண்டுள்ளதாக இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அதிகாரப் பரவலாக்கலுக்கு அனுமதி வழங்காத நிலையில், அதற்கு மாற்றுவழிகளை சிந்திக்காது உண்மைக்குப் புறம்பான அறிக்கைகள் வௌியிடப்படுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்க முடியாது எனவும் அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தலைவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிங்களத் தலைவர்கள் மதிக்காமையாலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாகக் காரணமாக அமைந்ததாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலையான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட வேண்டும் எனின், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை அமுல்படுத்த வேண்டும் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய வேண்டும் எனவும் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ளாது நஷ்ட ஈட்டிற்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும் M.A. சுமந்திரன் கூறியுள்ளார்.

அரச படைகளிடம் கையளிக்கப்பட்டவர்கள் இறந்திருப்பின், அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது தொடர்பான உண்மை வௌிக்கொணரப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை, சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு விசேட செயற்றிட்டம் ஒன்று அவசியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய அமெரிக்கா அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்கும் என அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினரும் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் வௌிவிவகார உபகுழுவின் தலைவருமான அமி பெரா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்