அமெரிக்கத் தூதுவருக்கு வௌிவிவகார அமைச்சு அழைப்பு

இராணுவத் தளபதிக்கு பயணத்தடை: அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு

by Staff Writer 16-02-2020 | 8:25 AM
Colombo (News 1st) நாட்டிற்கான அ​மெரிக்கத் தூதுவர் எலேனா பி டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) இன்று (16) வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடை தொடர்பில் அரசின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கே அமெரிக்கத் தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பயணத்தடை விதித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமைக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் வௌியிட்டுள்ளது. உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் அடிப்படையில் அமெரிக்காவால் இவ்வாறான பயணத்தடை விதித்தமைக்கு அரசாங்கம் ஆட்சேபனை வெளியிட்டுள்ளது. எனவே, இராணுவத் தளபதி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் ஆதாரங்களின் நம்பகத்தன்மையை சரிபார்த்து, விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை மீள்பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.