ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா தடை; பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு

by Staff Writer 15-02-2020 | 8:32 PM
Colombo (News 1st) இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பை வௌியிட்டுள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுள்ளதாகக் குறிப்பிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் நேற்று (14) அறிவித்தது. 2009 ஆம் ஆணடில் ஷவேந்திர சில்வா பொறுப்பாகவிருந்த 58 ஆவது படைப்பிரிவு, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இராஜாங்க திணைக்கள சட்டத்திற்கமைய, இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர், அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார் என இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஷவேந்திர சில்வாவை அரச தலைவரே இராணுவத் தளபதியாக நியமித்ததாகவும் இராணுவ சிரேஷ்டத்துவத்திற்கு அமைய அது இடம்பெற்றுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. ஷவேந்திர சில்வா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் எவையும் நிரூபிக்கப்படாத நிலையில், இவ்வாறான தடை விதிக்கப்படுவது நீதியானதல்லவெனவும் அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.