தடயவியல் கணக்காய்வு நிதிக்குழுவிடம் சமர்ப்பிப்பு

முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற அரசாங்க நிதிக்குழுவிற்கு சமர்ப்பிப்பு

by Staff Writer 15-02-2020 | 4:07 PM
Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை பாராளுமன்ற அரசாங்க நிதிக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதிக்குழுவினூடாக இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற நிதிக்குழுவின் தலைவர் எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் எதிர்வரும் 18 ஆம் திகதி இதற்கான கூட்டம் இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் 18 ஆம் திகதி பிற்பகல் 02 மணியளவில் இந்தக் குழு கூடவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் , அதிகாரிகள் உள்ளிட்ட தெரிவுக் குழுவின் உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, மத்திய வங்கியின் முறிகள் விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 18, 19 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளது. இதனிடையே ஶ்ரீலங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் குறித்து எதிர்வரும் 20 ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதம் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 07.30 வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.