கூட்டணியில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக மனோ அறிக்கை

சின்னம் எதுவாக இருப்பினும் கூட்டணியிலேயே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக மனோ கணேசன் அறிக்கை

by Staff Writer 15-02-2020 | 7:26 PM
Colombo (News 1st) சின்னம் எதுவாக இருப்பினும் பதிவு செய்யப்பட்ட கூட்டணியிலேயே தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இதயம், யானை என்ற இரு சின்னங்களும் இல்லாவிட்டால், அன்னப்பறவை சின்னத்தை ஏற்றுக்கொள்வதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச காணப்படுவதுடன், கூட்டணி தலைமைக்குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கூட்டணி பங்காளிக் கட்சித் தலைவர்களும் இடம்பெறுவதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கூட்டணியின் பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவும், வேட்பாளர் தெரிவுக்குழுவின் தலைவராக சஜித் பிரேமதாசவும் செயற்படுவார்கள் என மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தமது குறைந்தபட்ச நிலைப்பாடுகள் எனவும் அவற்றை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கும் என நம்புவதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவை ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சஜித் பிரேமதாச தலைமையிலான பெரும்பான்மை ஐக்கிய தேசியக் கட்சி அணியினரும், அனைத்து பங்காளிக்கட்சிகளும் இணைந்து பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். அதற்காக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கூட்டணியின் இதயம் சின்னத்தில் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடக்கூடாது என்ற சஜித் பிரேமதாச தலைமையிலான தமது நல்லெண்ணத்தை எவரும் பலவீனமாகக் கருதி விளையாடக்கூடாது எனவும் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடுமானால், அதற்கான முழுப்பொறுப்பை தம்முடன் முரண்படுபவர்களே ஏற்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்பட்டு அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்துவிட வேண்டாம் என சம்பந்தப்பட்டோரை மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.