அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்தனர்

by Staff Writer 15-02-2020 | 8:53 PM
Colombo (News 1st) ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர்களான அமி பெரா (Ami Bera) மற்றும் ஜோர்ஜ் ஹோல்டிங் (George Holding) ஆகியோர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாடினர். பல்துறைசார் உறவுகளை பலப்படுத்தக்கூடிய முறைமைகள் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உலகில் இந்த வலயமே பல்வகைமை கொண்ட வலயமாகத் திகழ்வதாக காங்கிரஸ் உறுப்பினர் அமி பெரா தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் கலிபோர்னியா மாநிலத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் உறுப்பினர் அமி பெரா சமகால வெளியுறவுத்துறை குழுவின் உறுப்பினருமாவார். அமி பெரா இந்த குழுவின் ஆசிய பசுபிக் மற்றும் அமைதி தொடர்பான உபகுழுவின் தலைவருமாவார். தற்போது நாட்டின் மிக முக்கிய விடயமாக பொருளாதார முன்னேற்றம் காணப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்த சந்திப்பின்போது சுட்டிக்காட்டியதுடன், இதற்கென அமெரிக்காவின் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.