பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டும் மிஸ்கின்

பாரம் படத்திற்கு போஸ்டர் ஒட்டும் மிஸ்கின்

by Bella Dalima 14-02-2020 | 5:06 PM
பாரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் இந்த படத்திற்காக போஸ்டர் ஒட்டப் போவதாகக் கூறியுள்ளார். இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பாரம்'. தேசிய விருது பெற்ற இப்படத்தை இயக்குநரும் தயாரிப்பாளருமான வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர்கள் ராம், மிஷ்கின், வெற்றிமாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் தெரிவித்ததாவது,
இயக்குநர் ராம் தொலைபேசியில் அழைத்து நாம் செய்ய ஆசைப்படும் படத்தை ஒருவர் எடுத்திருக்கிறார், வந்து பாருங்கள் என்றார். சரி பார்க்கலாம் என்று போனேன். ராம் சொன்னால் நன்றாக இருக்குமே என்று நினைத்து போய் பார்த்தால் இயக்குனரை பார்த்தவுடன் இந்தப்படம் நன்றாக இருக்காது என்று முடிவு செய்து விட்டேன். இவர் என்ன படம் எடுத்து விடுவார் என்று நினைத்தேன். ஒரு கலைஞனின் வாழ்க்கையே எதிர்பார்ப்பில் தான் இருக்கிறது. தலைவலியுடன் தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டது. அவர்களை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது. என் தந்தை தான் எனக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியவர். அவரைப் பார்த்துக்கொள்ள மறந்து விட்டேன். நம் அம்மா அப்பாவைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என சொல்லிக்கொடுக்கும் படம் இது. நாங்கள் சொல்வதால் அல்ல உண்மையில் இந்தப்படம் ஒரு சத்தியம். வாழ்வை வாழச்சொல்லிக் கொடுக்கும் படம். இந்திய சினிமாவில் முதல் மூன்று இடங்களில் இந்தப்படம் இருக்கும். அன்பை சொல்லும் படம். இந்த நாடும் நகரங்களும் நம்மை அம்மா அப்பாவை விட்டுப் பிரிக்கிறது. நாம் நகரத்தை நோக்கி நகர்ந்து விட்டோம். இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். தமிழகத்தில் ஆறு, ஏழு நகரங்களில் இந்தப் படத்தின் போஸ்டரை என் செலவில் ஒட்டப்போகிறேன். இது இந்தப் படத்திற்கு எனது நன்றிக்கடன். இந்தப்படம் என்னை மாற்றியது. இந்தப் படத்தை பாருங்கள் உங்கள் அம்மா அப்பாவை நேசிப்பீர்கள்.