நாடு கடத்தப்பட்ட உதய வீரதுங்க கைது

நாடு கடத்தப்பட்ட உதய வீரதுங்க கைது; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை

by Staff Writer 14-02-2020 | 3:38 PM
Colombo (News 1st) கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணைகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். மஸ்கட்டிலிருந்து அதிகாலை 4.37-க்கு ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர் நாட்டை வந்தடைந்தார். இலங்கை விமானப் படைக்கு உக்ரைனிலிருந்து மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்த போது, முறையற்ற வகையில் தலையீடு செய்து, கோடிக்கணக்கான பணத்தை மோசடியாக பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்கவிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய, சந்தேகநபருக்கு எதிராக பல சந்தர்ப்பங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச பொலிஸாரினூடாக சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், உதயங்க வீரதுங்க ஐக்கிய அரபு இராஜியத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் இன்று நாடு கடத்தப்பட்டார்.

ஏனைய செய்திகள்