சீனாவில் 1716 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

சீனாவில் 1716 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா தொற்று; உயிரிழப்பு 1381 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 14-02-2020 | 6:13 PM
Colombo (News 1st) சீனாவில் 1716 சுகாதார ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சீன சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வைத்தியசாலை அதிகாரிகள் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்குள்ளானோர் மற்றும் வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஹூபெய் மாகாணத்தில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில், நேற்றைய தினத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,381 ஆகப் பதிவாகியுள்ளது. இதனிடையே, தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5,090 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 63,922 ஆக உயர்வடைந்துள்ளது. ஹூபெயில் மாத்திரம் நேற்றைய தினத்தில் 116 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், 4,823 பேர் புதிதாகத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதேவேளை, சீனாவைத் தவிர வேறுநாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்கவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. எனினும், விதிவிலக்காக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலிலேயே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 44 புதியவர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குறித்த கப்பலில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது.