வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸூடனான நியூஸ்ஃபெஸ்ட்டின் விசேட நேர்காணல்

வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸூடனான நியூஸ்ஃபெஸ்ட்டின் விசேட நேர்காணல்

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 7:50 pm

Colombo (News 1st) 

கேள்வி: வட மாகாணத்தில் தற்போது மாகாண சபையொன்று இல்லாத நிலையில், வட மாகாணத்தின் மிக உயர்ந்த அதிகாரியாக நீங்கள் உள்ளீர்கள். மாகாணத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக நீங்கள் எடுக்கவுள்ள செயற்பாடுகள் என்ன? நீங்கள் பதவியேற்றதன் பின்னர் மாகாணத்தின் அபிவிருத்திசார் விடயத்தில் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: இரு வாரங்களுக்கு முன்னர் கௌரவ அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களுடைய தலைமையில் ஒரு கூட்டத்தை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்தியிருந்தோம். வட மாகாணத்திற்கான குடிநீர் திட்டங்கள் சம்பந்தமாகவும் அதற்கு வழங்கப்பட வேண்டிய நிதி சம்பந்தமாகவும் அந்தக் கூட்டம் இடம்பெற்றது. கைத்தொழிலுக்கு அமைவான இடங்களை தற்போது தெரிவு செய்து கொண்டிருக்கின்றோம். உற்பத்தியாளர்களைக் கொண்டுவருவதன் ஊடாக மக்களுக்குரிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயற்பாடுகளும் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்துறை, மக்களுடைய மீள்குடியமர்வு போன்ற இடங்களை நாங்கள் அடையாளப்படுத்திக்கொண்டிருக்கின்றோம். இந்த மாகாணத்தில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப வேண்டுமாக இருந்தால், சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: மாகாணத்தினுடைய அபிவிருத்திசார் செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது உங்களுக்கு இருக்கின்ற சவால்கள் என்ன?

பதில்: அரசாங்கம் தன்னுடைய நிதிப்பாதீட்டை சமர்ப்பிக்கவில்லை. எனவே, நிதிகளைப் பெற்றுக்கொள்வதற்குரிய வழிவகைகள் உடனடியாக எங்களுக்கு இல்லை.

கேள்வி: வட மாகாணத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் என்ன?

பதில்: 10,000 வீடுகள் இந்த மாகாணத்திற்கு தேவையாகவுள்ளன. இதை நோக்கி எங்களுடைய செயற்பாடுகள் தொடரும். அதேபோல, இந்த மக்களுக்கான குடிநீர் தேவை ஒன்று இருக்கின்றது. இங்கிருக்கின்ற குளங்கள், கால்வாய்களைத் திருத்துவதன் ஊடாக இந்த மக்கள் தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என எதிர்பார்க்கின்றோம். அதைவிட மிக முக்கியமாக இங்கு வேலைவாய்ப்பு இன்மை அதிகமாகக் காணப்படுகின்றது. இதற்காகத்தான் நாங்கள் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் இவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கும் அதேபோல உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனங்களை இங்கு கொண்டு வந்து அவற்றின் ஊடாக தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பந்தமாக விசாரணைகள் இடம்பெறுகின்றதா? பகிடிவதையை தடுப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?

பதில்: பகிடிவதையைக்கூட அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. ஆனால், தற்போது நடந்தது பகிடிவதை அல்ல. பகிடிவதை என்று சொல்கின்ற பெயரில் செய்யப்பட்ட அச்சுறுத்தல், துன்புறுத்தல், சித்திரவதை போன்ற விடயங்களும், மனித உரிமை மீறல்களும் தான். எனவே, நிச்சயமாக இவற்றுக்கு எதிராக சட்டம் தன்னுடைய கடமையைச் செய்யும்.

கேள்வி: உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு, வட மாகாண மக்கள் மற்றும் வட மாகாண அரசியல் பிரதிநிதிகளுக்கு நீங்கள் கூறுகின்ற விடயம் என்ன?

பதில்: இதிலே எந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளோ, தனிப்பட்ட இலாப நட்டங்களையோ கணக்கில் கொள்ளாமல் அனைவரும் இந்தப் பொதுப்பணிக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்ற விடயம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்