பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி

பொதுத்தேர்தல் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடலில் ஈடுபட்ட ஐக்கிய தேசியக் கட்சி

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 8:13 pm

Colombo (News 1st)  ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை இன்று மாலை சந்தித்தனர்.

இதன்போது கூட்டமைப்பின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட குழுவினரே இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்திப்பதற்கு முன்னர், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று மாலை கூடியது.

மலிக் சமரவிக்ரம, மங்கள சமரவீர, ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம், நவீன் திசாநாயக்க, அகில விராஜ் காரியவசம், லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளனர்.

இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் சின்னம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவிற்கு செல்வதற்கு முன்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் தொகுதி அமைப்பாளர்களை சஜித் பிரேமதாச இன்று முற்பகல் சந்தித்தார்.

இன்றைய தினம் இறுதித் தீர்மானம் எட்டப்பட வேண்டுமென இந்தக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கலந்துகொண்டார்.

இதன்போது,

இந்த அரசாங்கம் தவறான வழியில் பயணிக்கின்றது. பாராளுமன்றத் தேர்தல் வரை பல வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின் பின்னர் இந்த நிலை மாற்றமடையும். மக்களுக்கு சுமை ஏற்படுத்தப்படும். MCC-இல் கைச்சாத்திட்டுவிட்டனர். ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவதாகக் கூறுகின்றனர். நிதி எங்குள்ளது? திறைசேரியில் நிதியுள்ளதா? அரச வருமானம் இழக்கப்பட்டுள்ளது. வரி வருமானம் 900 மில்லியனாகும். இன்று ஆளுங்கட்சி இரண்டு தரப்பாகவுள்ளது. இரண்டு தரப்பிற்கும் இடையில் முரண்பாடுள்ளது. இந்த மோதல் வெடிக்கும். இந்தப் பிரச்சினை நீளும். இந்தப் பிரச்சினை மக்கள் மத்திக்கு வரும். அதிகாரத்தின் மூலம் இன்று இதனை மூடி மறைத்திருந்தாலும், அதனை மறைக்க முடியாத நேரம் வரும்.

என விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்