சின்னம் முக்கியமில்லை, ஒற்றுமையே முக்கியம்: சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து நிமல் சிறிபால டி சில்வா கருத்து

சின்னம் முக்கியமில்லை, ஒற்றுமையே முக்கியம்: சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு குறித்து நிமல் சிறிபால டி சில்வா கருத்து

எழுத்தாளர் Staff Writer

14 Feb, 2020 | 8:45 pm

Colombo (News 1st) சின்னம் தொடர்பான பிரச்சினையே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் காணப்படுகின்றது.

எனினும், அது தொடர்பில் தற்போது கலந்துரையாடி வருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தற்போது சின்னம் முக்கியமில்லை, ஒற்றுமையே முக்கியம் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற ரீதியில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்றே தாம் எதிர்பார்ப்பதாகவும் தாம் நியமித்த ஜனாதிபதியை பலவீனப்படுத்த வேண்டிய தேவை தமக்கு இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் எவ்வித நெருக்கடிகளும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையின் விகாராதிபதி முருத்தெடுவே ஆனந்த தேரர் தற்போதைய ஜனாதிபதியின் தேர்தல் நடவடிக்கைகளில் முன்நின்று செயற்பட்டவர்.

அவர் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

பிள்ளைகள் வீதியில் இறங்கும் நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் இதனைக் காண முடிகின்றது. இங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து கலந்துரையாடுவதற்கு அமைச்சர்கள் தயாராக இல்லை. சில அமைச்சர்களுக்கு அருகில் இன்று அதிபுத்திசாலிகள் உள்ளனர். அமைச்சர்களைவிட பெருமைக்குரியவர்கள் அவர்கள். எலும்புகளை உண்ணும் நாய் கடுமையானது என கூறுவோம். அந்த நிலைமை ஏற்பட்ட சில அமைச்சுகள் உள்ளன. மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் இந்த அரசாங்கமும் செயற்படுமாயின் கடந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நிலைமையே இந்த அரசாங்கத்திற்கும் ஏற்படும்.

என தேரர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள சில புதிய முகங்கள் தொடர்பான தகவல்கள் இந்நாட்களில் வௌிவருகின்றன.

வியத்மக அமைப்பினூடாக செயற்பாட்டு அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு தயாராகும் நடிகை ஓஷதி ஹேவாமத்தும, பத்தரமுல்லை அபேகமவில் இன்று நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வு, ‘ப்ரித் 2020’ என பெயரிடப்பட்டிருந்தது.

உள்நாட்டு மருந்துகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் உத்திக பிரேமரத்ன பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக, அமைச்சர் விமல் வீரவன்ச அனுராதபுரத்தில் இன்று அறிவித்தார்.

உத்திக பிரேமரத்னவின் ‘ஜவயட சவிய’ அமைப்பின் தொழில் சந்தை மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டம்
அமைச்சர் தலைமையில் இன்று நடைபெற்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்