இடைக்காலத் தடையை நீக்குமாறு கோரிக்கை

பிரித்தானிய கழிவுப்பொருள் கொள்கலன்களுக்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையை நீக்குமாறு கோரிக்கை

by Bella Dalima 13-02-2020 | 4:15 PM
Colombo (News 1st) பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலிருந்து கொண்டு செல்வதற்கு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு சட்ட மா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேன்முறையீட்ட நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ள கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க குறிப்பிட்டார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மீள் ஏற்றுமதி குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்கு பிரித்தானிய அதிகாரிகள் விருப்பம் தெரிவிக்காதுள்ளதாக மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு இணங்க, விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவை நீக்கவோ அல்லது நீடிப்பது குறித்தோ எதிர்வரும் 4 ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் A.H.M.D. நவாஸ் மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.