இத்தாலி வலதுசாரிக் கட்சி தலைவர் மீது விசாரணை

இத்தாலியின் வலதுசாரிக் கட்சி தலைவருக்கு எதிரான விசாரணைக்கு அங்கீகாரம்

by Staff Writer 13-02-2020 | 10:27 AM
Colombo (News 1st) இத்தாலி வலதுசாரிக்கட்சியின் தலைவர் மட்டியோ சல்வினியை விசாரணை செய்வதற்கு ஆதரவாக அந்நாட்டு செனட் சபை வாக்களித்துள்ளது. சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை கடலிலேயே தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டு மீதான விசாரணைகளை மேற்கொள்வதற்கே செனட் சபை அனுமதியளித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிசிலி கரையோரத்தில் புகலிடக்கோரிக்கையாளர்களை சட்டவிரோதமாக பல நாட்கள் படகிலேயே தடுத்து வைத்திருந்ததாக இத்தாலியின் உள்விவகார அமைச்சராகக் கடமையாற்றிய மட்டியோ சல்வினி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது, 116 புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தாம் நீதிமன்றத்திற்கு செல்லவேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ள மட்டியோ சல்வினி, தமது குடியேற்றக்கொள்கைகள் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதாக உலகத்திற்குச் சொல்ல வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாம் நிறைவேற்றிய விடயங்கள் தொடர்பில் பெருமையடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.