விமலிடம் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு வழங்குமாறு கோரி ரிஷாட் கடிதம்

விமலிடம் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு வழங்குமாறு கோரி ரிஷாட் கடிதம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 8:38 pm

கூட்டுறவு மற்றும் வணிக அமைச்சராக செயற்பட்ட ரிஷாட் பதியுதீன் 100 கோடி ரூபா மானநஷ்ட ஈடு கோரி அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

விமல் வீரவன்ச நேற்று (10) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுமத்திய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை முன்னெடுத்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று தெரிவித்திருந்ததாவது,

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய நேற்று ஒருவரின் வீட்டை பரிசீலிக்கும் போது, பல ஆவணங்களை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். அந்த ஆவணங்களில் ரிஷாட் பதியுதீனால் பல்வேறு நபர்களின் பெயர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் தொடர்பிலான 227 உறுதிப்பத்திரங்களின் பிரதிகள் உள்ளன. அத்துடன் 8 மூலப்பிரதிகளும் உள்ளன. 228 உறுதிப்பத்திர பிரதிகள் என்றால் எத்தனை ஏக்கர் என்பதனை புரிந்து கொள்ள முடியும். அத்துடன், சதொச நிறுவனம் ஊடாக கடந்த அரசாங்கக் காலத்தில் இடம்பெற்ற திருட்டு கொடுக்கல் வாங்கல்களுக்கான அதிகளவிலான ஆவணங்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் உள்ளன. 52 நாட்கள் ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அமெரிக்க கணக்கிற்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் சென்றுள்ளது. சென்றதா, இல்லையா என்பதனை ஆராயுங்கள். இரண்டாவது இலட்சம் போகும் போது FBI அதனை நிறுத்தியது. இந்த உறுதிப்பத்திர பிரதிகளை சரியாக விசாரணை செய்தால், ரிஷாட் பதியுதீன் சட்டவிரோதமாக உழைத்த பெருந்தொகையில் சிறிய பகுதி அம்பலமாகும்.

என விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அவ்வாறு காணிகள் இருந்தால் அதனை அரச உடமையாக்குமாறு நான் பகிரங்கமாக பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூறியுள்ளேன்.எனக்கு 42 நிறுவனங்கள் இருந்தன. நான் ஒப்பந்த விடயத்தில் தலையிடுவது கிடையாது. சதொச வாகனத்தை பயன்படுத்தி சஹ்ரான் குண்டு கொண்டு வந்ததாக சொன்னார். பல குற்றச்சாட்டுகளை என் மீது சுமத்தினார். எல்லா குற்றச்சாட்டுகளும் பொய் என நாங்கள் நிரூபித்துள்ளோம். அதேபோல, நேற்று சொன்ன மூன்று குற்றச்சாட்டுகளையும் நான் பொய் என்று சொல்வது மாத்திரம் அல்லாமல், 100 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கேட்டு எனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளேன். 14 நாட்களுக்குள் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நான் தயாராக உள்ளேன்.

என ரிஷாட் பதியுதீன் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்