வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா?

வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா?

வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா?

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 8:58 pm

Colombo (News 1st) வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவில் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

அவரிடம் வினவப்பட்ட வாராந்த கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இதற்கான பதிலை அவர் வழங்கியுள்ளார்.

வாராந்த கேள்விக்கு பதிலளித்துள்ள வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்று, தங்களைப்பற்றி குறைகூறி நற்பெயர் பெற்றுக்கொள்ள எண்ணுகின்றாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், பிரதமர் உண்மையில் இந்த விடயம் தொடர்பில் தெரியாமல் கூறினாரா அல்லது தெரிந்தும் தமக்கு மாசு ஏற்படும் வகையில் கூறினாரா என்று தாம் அறியவில்லை எனவும் விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

தன்னுடைய 5 வருட பதவிக்காலத்தில் ஒரு சதத்தையேனும் மத்திய அரசிற்கு திருப்பி அனுப்பவில்லை என சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு 12,000 மில்லியன் கோரப்பட்ட போதிலும், 1,650 மில்லியனே வழங்கப்பட்டதாகவும் எதிர்வரும் காலத்தில் ஒரு வருடத்திற்கு 3000 மில்லியன் தருவதாகக் கூறப்பட்ட போதிலும், பகுதி பகுதியாகவே அது தரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனாலேயே தமது திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தை மத்திய அரசாங்கம் எமக்குத் தராமல் இருந்துவிட்டு, நாம் திருப்பி அனுப்பினோம் என்று இந்தியாவில் சென்று பிரதமர் கூறுவது விந்தையாக இருப்பதாகவும் வாராந்த கேள்விக்கான பதிலில் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசாங்க அதிபர்களுக்கே பணம் அனுப்பப்பட்டதாகவும் அவர்களில் பலர் பணத்தைத் திருப்பி அனுப்பியதாக அறியக்கிடைத்துள்ளதாகவும் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

பணத்தைத் திருப்பி அனுப்புவதால் மத்திய அரசாங்கத்தின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கும் என்பதால் அவ்வாறு அனுப்புகின்றார்களா அல்லது வேறு காரணங்களுக்காகத் திருப்பி அனுப்புகின்றார்களா என்பது பற்றி அரசாங்க அதிபர்களே அறிவிக்க வேண்டும் எனவும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு முழு இலங்கையிலும் இருக்கும் 850-க்கும் மேற்பட்ட திணைக்களங்கள், அமைச்சுக்கள் ஆகியவற்றில் சிறந்த நிதி நிர்வாகத்திற்காக தனது முதலமைச்சர் அமைச்சுதான் முதற்பரிசைப் பெற்றதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்