அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 103 முறைப்பாடுகள்

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 103 முறைப்பாடுகள்

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் 103 முறைப்பாடுகள்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2020 | 8:33 am

Colombo (News 1st) அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுவரை 103 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆணைக்குழுவில் பெற்றுக்கொள்ளப்பட் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட, அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் குழுவால் முதலாவதாக 4 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோரால் பொய்யான சாட்சிகள் வழங்கப்பட்டு கொழும்பு மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக சதி முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், சாட்சிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணைக்குழுவால் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதன்பிரகாரம், அட்மிரல் D.K.P. தசநாயக்க உள்ளிட்ட கடற்படை அதிகாரிகள் இருவர் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கினர்.

எவ்வாறாயினும், முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் வசந்த கரன்னாகொட நேற்று ஆணைக்குழுவில் ஆஜராகவில்லை.

அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமானதுடன் இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன.

அரசியல் பழிவாங்கல்களை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன செயற்படுவதுடன், ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜயதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்த்ரா பெர்னாண்டோ ஆகியோர் ஏனைய அங்கத்தவர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்