92 ஆவது ஆஸ்கர் விருது விபரங்கள்

92 ஆவது ஆஸ்கர் விருது விபரங்கள்

by Fazlullah Mubarak 10-02-2020 | 11:49 AM
92 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லொஸ் ஏஞ்சல்ஸ் - டொல்பி அரங்கில் மிக கோலாகலமாக நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர்கள் இன்றி விழா நடைபெற்றது. ஜோக்கர், ஐரிஷ்மேன், 1917, ONCE UPON A TIME IN THE HOLLYWOOD ஆகிய திரைப்படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. 2019 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க வகையில் மக்களிடையே வரவேற்பையும், சமூகத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்திய திரைப்படங்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு பிரிவுகளின் கீழ், ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இம்முறை சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென்கொரிய படைப்பான பெரசைட் திரைப்படம் வென்றது. இந்த திரைப்படத்தை இயக்கிய போங் ஜோன்-ஹோ சிறந்த இயங்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். 91 ஆண்டுகால ஆஸ்கர் விருது வரலாற்றில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெறும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படமாக பெரசைட் பதிவாகியுள்ளது. இந்த திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை இந்த ஆண்டு குவித்துள்ளது. மூன்று விருதுகளை '1917' திரைப்படமும், ONCE UPON A TIME IN THE HOLLYWOOD மற்றும் ஜோக்கர், Ford vs Ferrari ஆகிய திரைப்படங்கள் தலா இரண்டு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றன. இம்முறை சிறந்த துணை நடிகர் விருது ONCE UPON A TIME IN THE HOLLYWOOD திரைப்பட நடிகர் ப்ராட் பிட்டுக்கு கிடைத்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக ஹொலிவுட் திரைத்துறையில் சிறந்த நடிகராக விளங்கும் பிராட் பிட் தனது நடிப்பு திறமைக்காக பெறும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும். சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது TOY STORY 4 திரைப்படத்திற்கு கிடைத்தது. சிறந்த அனிமேஷன் குறும்பட விருதினை Hair Love சுவீகரித்தது. சிறந்த குறும்படமாக The Neighbors' Window இம்முறை ஆஸ்கர் விருதை வென்றது. சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருது லிட்டில் வுமன் திரைப்படத்திறகாக ஜெக்வலின் டுர்ரான் பெற்றார். சிறந்த ஆவணப் படமாக அமெரிக்கன் ஃபேக்ட்ரி தெரிவு செய்யப்பட்டது.