மின்சாரம் குறித்த பிரச்சினைகளை விசாரிக்க குழு

மின்சாரம் குறித்த பிரச்சினைகளை விசாரிக்க அறுவர் கொண்ட குழு நியமனம்

by Staff Writer 10-02-2020 | 6:12 PM
Colombo (News 1st) மின்சாரம் தொடர்பான நாளாந்த பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அறுவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர், மின்சார சபையின் அதிகாரிகள் இருவர் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் இருவர் உள்ளிட்டோர் அங்கம் வகிப்பதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின்விநியோகம் தொடர்பில் பெற்றோலிய அமைச்சில் இன்று காலை கலந்துரையாடப்பட்டதுடன், மின்சார உற்பத்தியின்போது நாளாந்தம் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார உற்பத்தி தொடர்பில் தொடர்பிலான அனைத்து நிறுவனங்களும் இந்தக் குழுவினால் மீளாய்வு செய்யப்பட்டு அது தொடர்பிலான அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. மின்சக்தி தொடர்பிலான எந்தவொரு பிரச்சினைக்கும் பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் எந்தத் தீர்மானத்தையும் எடுக்கக்கூடாது எனவும் பிரச்சினை ஏற்பட்டால் அது தொடர்பில் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் அமைச்சரினால் அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.