கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண்ணின் தற்போதைய நிலை

கொரோனா தொற்றுக்குள்ளான சீனப் பெண்ணின் தற்போதைய நிலை

எழுத்தாளர் Staff Writer

10 Feb, 2020 | 10:04 pm

Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் சிகிச்சை பெற்றுவரும் சீனப் பெண், விசேட வைத்தியர் குழாமினால் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

புதிய கொரோனா வைரஸ் தொற்றியதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் இலங்கையில் பதிவானதை அடுத்து, தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அளப்பரிய சேவையை ஆற்றியுள்ளது.

தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆற்றிய விசேட சேவை தொடர்பான தகவல்களை வௌிக்கொணரும் நோக்கில், நியூஸ்பெஸ்ட் குழாம் இன்று அங்கு நேரடியாக சென்றது.

தொற்றுநோயியல் பிரிவில் ஒவ்வொரு நோயாளர்களும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள அறைகளில் அனுமதிக்கப்பட்டு, விசேட சிகிச்கைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

சீனப் பிரஜையான பெண்ணுக்கும் இவ்வாறே பிரத்தியேக அறை வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் என அனைவரும் இணைந்து இந்த அளப்பரிய சேவையை பாதுகாப்பாக முன்னெடுத்து வருகின்றனர்

நோயாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் உணவு வழங்கப்படுகின்றது.

அத்தோடு நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டுவரும் அம்பியூலன்ஸ்களும் முறையான விதத்தில் துப்பரவு செய்யப்பட்டதன் பின்னரே இங்கிருந்து வெளியே செல்கின்றன.

இலங்கையில் முதற்தடவையாக கொரோனோ வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட சீன நாட்டு பெண்ணையும் சந்திப்பதற்கு நாம் பின்வாங்கவில்லை.

அவரது உடல்நிலை தற்போது தேறியுள்ளபோதிலும் தொடர்ந்தும் அவர் வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நாம் அங்கு செல்லும் போது வைத்தியசாலையை விட்டு அவர் வெளியே செல்லும் நாள் தொடர்பில் வைத்தியர் அவரிடம் தெரிவித்த போது அவர் மகிழ்ச்சியை இவ்வாறு வௌிப்படுத்தினார்.

சீன மொழியை மாத்திரம் அறிந்துள்ள இந்தப் பெண், நாம் வினவிய கேள்விகளுக்கு Google App உதவியுடன் எமக்கு பதிலளித்தார்.

எமது குழுவினரின் பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக நோயாளர்களை எம்மால் பராமரிக்க முடிந்துடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான குணப்படுத்தும் வாய்ப்பு எமக்கு கிட்டியது என விசேட வைத்திய நிபுணர் எரங்க நாரங்கல தெரிவித்துள்ளார்.

ஏதோவொரு இடத்திலிருந்து அல்லது வேறொரு நாட்டிலிருந்து நோய் தொற்றுக்கு உள்ளான நோயாளி ஒருவர் எமது வைத்தியசாலைக்கு வருகை தந்தால் அந்தத் தொற்றை பரவாமல் தடுப்பதே எமது தொழில். அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். அந்தப் பணி சிறப்பாக முன்னெடுக்கப்பட்டதையிட்டு நாம் திருப்தியடைகிறோம் என சீனப் பெண்ணுக்கு பொறுப்பாகவிருந்த தாதி குமாரி அமரசேன கூறியுள்ளார்.

தமது அனைத்து ஊழியர்களும் விடுமுறை எடுக்காது தொடர்ச்சியாக ஒன்றாக பணியாற்றியதாக சுகாதார உதவியாளர் ஶ்ரீ சமன் வீரசிங்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நோயார்கள் வைத்தியசாலைக்கு வருகை தருவதற்கு அச்சமடைந்தனர். வைத்தியசாலையில் சில சேவைகளை முன்னெடுத்த சில நிறுவனங்கள் அவற்றை இடைநடுவே கைவிட்டு சென்றன. எமது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் மட்டுமே இங்கு இருந்தோம். அவர்களுக்கு அறிவுரைகளோ ஆலோசணைகளோ வழங்குவதற்கேனும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது அவர்கள் சிறப்பாக செயற்பட்டார்கள். சுகாதார ஊழியர்களிடம் இருக்க வேண்டிய மனித நேய பண்பு அதிகமாகவே இருந்தது என

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் பணிப்பாளர், வைத்தியர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட, இந்த வைரஸை கட்டுப்படுத்த ரோபோக்களை பயன்படுத்தும்போது, சவாலை சிறப்பாக எதிர்கொண்டு நோயாளர்களையும் இந்த நாட்டையும் பாதுகாக்க தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் வைத்தியர்களும் ஊழியர்களும் பாராட்டுக்குரியவர்களாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்