19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம் பங்களாதேஷ் வசமானது

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணம் முதற்தடவையாக பங்களாதேஷ் வசம்

by Fazlullah Mubarak 09-02-2020 | 10:00 PM

19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் முதற் தடவையாக சம்பியனானது.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் டக்வேர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் 03 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.   Potchefstroom மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. திலக் வர்மா 38 ஒட்டங்களை பெற்றார். யசஸ்வி ஜெய்ஸ்வால் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்திய இளையோர் அணியின் ஏழு துடுப்பாட்ட வீரர்கள் பத்துக்கும் குறைவான ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். அவிஷேக் டாஸ் 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பங்களாதேஷ் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் முதல் விக்கெட்டில் 50 ஓட்டங்களை பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். எனினும் ரவி பிஷோனி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியை இந்தியாவுக்கு சாதகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பர்வேஸ் ஹூஸைன் எமோன் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பங்களாதேஷ் 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து டக்வேர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷின் வெற்றி இலக்கு 46 ஓவர்களில் 170 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கை பங்களாதேஷ் 7 விக்கெட் இழப்புக்கு 23 பந்துகள் எஞ்சியிருக்க கடந்தது. அணித்தலைவர் அக்பர் அலி ஆட்டமிழக்காமல் 4 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷ் இளையோர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.