கடனை மீள செலுத்துவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை

கடனை மீள அறவிடுவதை இடைநிறுத்துமாறு இந்திய அரசிடம் பிரதமர் வேண்டுகோள்

by Staff Writer 09-02-2020 | 1:25 PM
Colombo (News 1st) இலங்கை பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள அறவிடுவதை 3 வருடங்களுக்கு இடைநிறுத்துமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 'த ஹிந்து' பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரம் தொடர்பிலான மீளாய்வை முன்னெடுக்கும் வரை சலுகைகளை வழங்குமாறு இந்தியாவை கோரியதாகவும் இந்திய அரசு அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்குமாயின், சீனா உள்ளிட்ட ஏனைய வௌிநாடுகளும் அவ்வாறான திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கலாம் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார். இவை அனைத்தும் இந்தியாவின் நிலைப்பாட்டிலேயே தங்கியுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வரலாற்றிலேயே 5 பில்லியன் ரூபா அதிகூடிய கடனை இந்த வருடத்திற்குள் செலுத்தப்படுவது தொடர்பில் 'த ஹிந்து' பத்திரிகை பிரதமரிடம் கேள்வியெழுப்பியிருந்தது. எவ்வாறாயினும் கடனை செலுத்துவதில் பின்வாங்குவதற்கு தேவையில்லை என குறிப்பிட்டுள்ள பிரதமர், கடனை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்தல் அவசியம் என கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பிலும் இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது. திருகோணமலை துறைமுகத் திட்டம் குறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் இந்தியா - ஜப்பான் ஒன்றிணைந்து முதலீடு செய்துள்ள கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் எல் என் ஜீ முனையம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை அப்போதைய அரசு முன்கொண்டு செல்லவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க கைச்சாத்திட்ட உடன்படிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்ததாகவும் 'த ஹிந்து' பத்திரிகைக்கு பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் குறித்த திட்டம் குறித்து தாம் பொறுப்புக் கூறுவதில்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதன்போது கூறியுள்ளார்.