by Staff Writer 08-02-2020 | 3:40 PM
Colombo (News 1st) யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகிடிவதை தொடர்பான விசாரணை நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என யாழ். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம், பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கை கோரியுள்ளது.
ஒழுக்காற்றுக்குழுவின் விசாரணைகள் நிறைவு பெற்றதன் பின்னர் அவர்களால் வழங்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய , மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிக்கு வழங்கக்கூடிய பாதுகாப்புகள் உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி கதிர்காமநாதன் கந்தசாமி தலைமையில் நேற்று விசேட கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக ஒழுக்காற்கு குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் 20 பேர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, புதுமுக மாணவர்களை வரவேற்பதற்கான நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும் நேற்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.
புதுமுக மாணவி ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசியில் கலந்துரையாடியமை மற்றும் பாலியல் துன்புறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் வௌியான தகவல்களைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.