ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

எழுத்தாளர் Staff Writer

08 Feb, 2020 | 7:59 pm

Colombo (News 1st)  ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று (07) இடம்பெற்றன.

மாவனெல்லையில் புத்தரின் சிலை சேதமாக்கப்பட்டமை தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக கேகாலை பிரிவிற்கு பொறுப்பாகவிருந்த ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று ஆஜராகியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற முறை தொடர்பில் தௌிவூட்டிய முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர், மாவனெல்லை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் விசாரணைகளை முன்னெடுத்ததாகக் கூறினார்.

எனினும், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுத்த விசாரணை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் சாட்சியமளித்துள்ளார்.

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பிரிவினைவாத குழுக்கள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்கு அறிவிக்காததன் பொறுப்பை, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ உள்ளிட்ட உயர் அதிகாரிகள் ஏற்க வேண்டும் என விசாரணைகளின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவிடம் அசாத் சாலி குறுக்கு விசாரணை செய்ததுடன், சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டாரா என சாட்சியாளரிடம் வினவினார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவ்வாறு இடம்பெறவில்லை என தெரிவித்த சாட்சியாளர், மீண்டும் அந்த கேள்வியை வினவிய போது பதிலளிக்கவில்லை.

பின்னர், பாலித சிறிவர்தனவை சிறிது நேரம் அங்கிருந்து வௌியேற்றியதுடன், அவ்வாறான கேள்வியொன்றை அவரிடம் வினவுவதற்கான காரணம் என்ன என்பதை அசாத் சாலியிடம் ஆணைக்குழு வினவியது.

குறித்த சாட்சியாளர் கொலைக்குற்றச்சாட்டில் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர் என அசாத் சாலி தெரிவித்தார்.

பின்னர் சாட்சியாளரை மீண்டும் விசாரணைக்கு அழைத்து, எத்தனை தடவைகள் பணி நீக்கம் செய்யப்பட்டார் என வினவியபோது, அது தொடர்பில் தமக்கு நினைவில்லை என அவர் தெரிவித்தார்.

கொலைக்குற்றச்சாட்டு உள்ளதா என வினவிய சந்தர்ப்பத்தில், அது தொடர்பில் தனக்கு நினைவில் இல்லை என மீண்டும் சாட்சியாளர் கூறினார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் பொலிஸாரும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால், மாவனெல்லை சம்பவம் தொடர்பில் அதிகளவு முன்னேற்றத்தை கண்டிருக்க முடியும் என சாட்சியத்தின் முடிவில் பாலித சிறிவர்தன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்