மலாலாவை சுட்ட பயங்கரவாதி தப்பியோட்டம்

மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி இராணுவ சிறையில் இருந்து தப்பியோட்டம்

by Bella Dalima 07-02-2020 | 5:49 PM
Colombo (News 1st) மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த

 

Ehsanullah Ehsan எனும் நபர் இராணுவ சிறையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த தேஹ்ரீக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளரும் ஜமாத் உல் அப்ரார் எனும் மற்றொரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவருமான இஷானுல்லா இஷான், ஜனவரி 11ஆம் திகதி இராணுவ சிறையில் இருந்து தப்பி வெளியேறியதாக ஒலிப்பதிவொன்றை நேற்று (06) வெளியிட்டுள்ளார். அதில், கடந்த பெப்ரவரி 5, 2017-இல் ஏற்படுத்தப்பட்ட 3 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான் சரணடைந்தேன். ஆனால், பாகிஸ்தான் அதிகாரிகள் அதை மீறி என்னையும் எனது குழந்தைகள் உட்பட குடும்பத்தையும் சிறை வைத்தனர். யாருடன் நான் ஒப்பந்தம் ஏற்படுத்தினேன் என்று விரைவில் தெரிவிப்பேன். அதில் குறிப்பிடப்பட்ட அம்சங்களையும் வெளியிடுவேன். தற்போது எனது குடும்பத்துடன் துருக்கியில் வசித்து வருகிறேன் என்று ஒலிப்பதிவில் கூறியுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு மலாலா யூசுப்சாய் மீது துப்பாக்கிச்சூடு, 2014ஆம் ஆண்டு பெஷாவர் இராணுவப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக 134 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் உயிரிழப்பு, ராவல்பிண்டி மற்றும் கராச்சி மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் 9 வெளிநாட்டினர் கொலை, வாகா எல்லையில் தற்கொலைப் படைத் தாக்குதல், 2016 இல் லாகூரில் ஈஸ்டர் திருநாளில் வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் 75 பேர் பலி மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சதிச் செயல்களில் இஷானுல்லா இஷான் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர் 2017ஆம் ஆண்டில் இராணுவத்திடம் சரணடைந்தார். இருப்பினும், பாகிஸ்தான் இராணுவம் இதுவரை இஷான் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்த சிறுமி மலாலா யூசுப்சாய் மீது கடந்த 2012 அக்டோபர் மாதம் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. தலையில் சுடப்பட்ட அவர் உடனடியாக பெஷாவர் இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அதிர்ஷ்டவசமாக மலாலா உயிர் பிழைத்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்றார். அங்கிருந்து பாகிஸ்தான் பெண் குழந்தைகளின் கல்விக்காக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி வரும் மலாலாவிற்கு அமைத்திக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு வயது 17. இதனை இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் உரிமைகளுக்காக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தியுடன் அவர் பகிர்ந்துகொண்டார்.