தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 9ஆம் திகதி கைச்சாத்து

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 9 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது

by Staff Writer 07-02-2020 | 8:03 PM
Colombo (News 1st) தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி கைச்சாத்திடும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் இதுவரை எதுவித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கட்சி தனியாக களமிறங்கவுள்ளதாக கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ் தேசியக் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதுவரை தாம் உத்தியோகபூர்வமாக எந்தவித முடிவையும் எடுக்கவில்லை எனவும் தமிழ் இனத்தின் விடிவிற்காக எந்தவித விட்டுக்கொடுப்பிற்கும் செல்ல முடியும் என்றும் தமிழ் தேசியக் கட்சியின் பிரசார செயலாளர் ஜெயரட்ணம் ஜனார்தனன் கூறினார்.

ஏனைய செய்திகள்