ஜப்பான் கப்பலில் 61 பேருக்கு கொரோனா தொற்று 

ஜப்பானில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு

by Bella Dalima 07-02-2020 | 5:19 PM
Colombo (News 1st) ஜப்பானின் யொக்கோஹாமா (Yokohama) துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள பயணிகள் கப்பலில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 41 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, பயணிகள் கப்பலில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 3700 பேருடன் குறித்த கப்பல் கடந்த இரண்டு வாரங்களாக ஜப்பானின் யொக்கோஹாமா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இதேவேளை, மற்றுமொரு கப்பலான World Dream-இல் முன்னதாகப் பயணித்திருந்த 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர், அக்கப்பலை ஹாங்காங்கில் நங்கூரமிட்டு தடுத்துள்ளனர். எவ்வாறாயினும், கப்பலில் தற்போதுள்ள 3600 பயணிகளில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஜப்பானில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளங்காணப்பட்டோரில் 41 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பானிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளது.