தேசியப்பட்டியலை தவறாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

கல்விமான்களுக்கான தேசியப் பட்டியலை தவறாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள்

by Staff Writer 07-02-2020 | 7:28 PM
Colombo (News 1st) புத்திஜீவிகள், கல்விமான்களை பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காகக் கொண்டுவரப்பட்ட தேசியப் பட்டியலை அரசியல் கட்சிகள் தவறாகப் பயன்படுத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை தேசியப் பட்டியல் ஊடாக நியமித்திருந்தது. முல்லைத்தீவில் போட்டியிட்டு தோல்வியடைந்த சாந்தி ஶ்ரீஸ்கந்தராசாவிற்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதுடன், திருகோணமலையில் போட்டியிட்டு தோல்வியடைந்த துரைரட்ணசிங்கத்திற்கும் தேசியப் பட்டியல் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நிலையில், குறித்த மாவட்டத்திலுள்ள துரைரட்ணசிங்கத்திற்கு தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் யாழில் போட்டியிட்டு தோல்வியடைந்த அங்கஜன் இராமநாதனுக்கு தேசியப் பட்டியல் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த M.L.A.M.ஹிஸ்புல்லாஹ்விற்கும் தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டது. அத்துடன், முன்னாள் அமைச்சர்களான பைசர் முஸ்தபா மற்றும் A.H.M.பௌசி ஆகியோரும் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டிருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் டி.எம்.சுவாமிநாதன் தேசியப் பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கடமையாற்றிய மொஹமட் இஸ்மாயில் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்தில் இடம்பிடித்திருந்தார். கிழக்கு மாகாண சபையில் அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் மொஹமட் நசீருக்கு பாராளுமன்ற தேசியப் பட்டியல் வழங்கப்பட்டதுடன், கடந்த தேர்தலில் திருகோணமலையில் போட்டியிட்டு தோல்வியடைந்த M.S.தௌபீக் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு சென்றார்.

ஏனைய செய்திகள்