கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

by Staff Writer 07-02-2020 | 7:09 PM
Colombo (News 1st) கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது மற்றும் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று (06) நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அலரி மாளிகையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது, சாய்ந்தமருதிற்கு நகர சபை வழங்குவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்குகொண்டிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இரமாநாதன், ஸ்ரீயானி விஜேவிக்கிரம, H.M.M.ஹாரிஸ், சதாசிவம் வியாழேந்திரன், தேசிய காங்கிரஸின் தலைவர் A.L.M.அதாவுல்லாவும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். கல்முனை வடக்கு உப தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடா்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டதாகவும் இந்த விடயம் தொடர்பில் தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M.அதாவுல்லா கருத்துத் தெரிவித்ததன் பின்னர் தனது கருத்தினை தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹாரிஸ் கூறினார். இந்த விடயம் தொடர்பில் வினவுவதற்கு தேசிய காங்கிரஸ் தலைவர் A.L.M.அதாவுல்லாவை தொடர்புகொள்வதற்கு முயற்சித்த போதிலும் அது பலனளிக்கவில்லை.