இந்திய கடற்படையின் ஜமுனா கப்பல் இலங்கை வருகை

by Staff Writer 07-02-2020 | 8:30 PM
Colombo (News 1st) இந்திய கடற்படைக்கு சொந்தமான ஜமுனா கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. இலங்கையின் சமுத்திர நீர் அளவீடு மற்றும் தரவு சேகரிப்பிற்காக இந்த விசேட போர்க்கப்பல் நேற்று (06) இலங்கை வந்தடைந்தது. இந்திய கடற்பரப்பை சூழவுள்ள வலயத்தில் கண்காணிப்பில் ஈடுபடும் ஜமுனா கப்பல், இலங்கையில் சமுத்திர வலய வரைபடத்தை மீண்டும் தயாரிக்கும் நோக்கில் வருகை தந்துள்ளது. 87.8 மீட்டர் நீளமான 1929 தொன் பாரமுடைய இந்த அதிநவீன போர்க்கப்பலை 1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் இந்திய கடற்படை பயன்படுத்தி வருகின்றது. மணிக்கு 16 தொடக்கம் 26 கடல்மைல் வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்தக் கப்பலில் 16 சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், சுமார் 160 பேரைக் கொண்ட பணிக்குழு பணியாற்றுகின்றது. எவ்வாறாயினும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கண்காணிப்பதற்கு இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என கடற்படை குறிப்பிட்டது. எந்தவொரு நேரத்திலும் விமானத்தை தரையிறக்கக்கூடிய வசதி கொண்ட இந்தக் கப்பல், சுமார் மூன்று மாதங்கள் இலங்கையின் கடற்பரப்பில் தரித்து நிற்கவுள்ளது.