வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல்

அட்மிரல் வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல்

by Staff Writer 07-02-2020 | 4:52 PM
Colombo (News 1st) முன்னாள் கடற்படைத் தளபதி Admiral of the Fleet வசந்த கரன்னாகொடவிற்கு மூன்றாவது தடவையாக அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் கடற்படைத் தளபதியினூடாக அறிவித்தலை அனுப்புமாறு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் வசந்த கரன்னாகொட மன்றில் ஆஜராகாமையால் அவருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பிரதிவாதியின் பெத்தேகொன மற்றும் கிருலப்பனை பகுதிகளிலுள்ள வீடுகள் மூடியிருப்பதாக சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் சரத் ஜயமான்ய மன்றுக்கு அறிவித்துள்ளார். இதன் காரணமாக நீதிமன்றத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள இரண்டு அறிவித்தல்களையும் சமர்ப்பிக்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்களை ஆராய்ந்த சம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன தாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மூன்றாவது தடவையாகவும் அறிவித்தலை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. நாட்டின் கடற்படைத் தளபதியாக சேவையாற்றி, தற்போதும் கடற்படையின் பாதுகாப்பின் கீழ் வாழும் வசந்த கரன்னாகொட, அரச நிகழ்வுகளில் பகிரங்கமாக கலந்துகொள்வதாக சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்துள்ளார். எனினும், அரச அதிகாரிகளால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாமல் உள்ளமை கவலைக்குரிய விடயம் எனவும் அவர் கூறியுள்ளார். விடயங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம் இந்த வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.