பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியா பயணம்

by Staff Writer 07-02-2020 | 4:35 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். பாரத பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு சென்றுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்றதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவென பிரதமரின் செயலாளர் காமினி செனரத் தெரிவித்தார். இந்த விஜயத்தில் டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். பிரதமர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார். இந்த விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த அரச அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதன்போது அரசியல், சுற்றுலா, பாதுகாப்பு, கலாசாரம், வர்த்தகம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளனர். கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பிலும் வீட்டுத்திட்டம் தொடர்பிலும் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.