1000 ரூபா வழங்காத தோட்ட நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்குமா?

by Bella Dalima 06-02-2020 | 9:05 PM
Colombo (News 1st) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். தோட்டத்தொழிலாளர்களுக்காக உயர்த்தப்பட்டுள்ள 1000 ரூபாவை நாளாந்த சம்பளமாக செலுத்துவதை தோட்ட நிறுவனங்கள் தற்போது நிராகரித்துள்ளன. இவ்வாறான நிறுவனங்களை மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்குமா அல்லது அரசாங்கத்தின் ஊடாக செலுத்தும் இயலுமையுள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவினர். தோட்ட நிறுவனங்களுக்கு முதலாம் திகதி வரை கால அவகாசம் உள்ளதால், அதுவரை பார்த்துவிட்டு அவர்கள் அதனை செய்யாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன பதிலளித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (05) எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, ​பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு1000 ரூபா சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார்.

ஏனைய செய்திகள்