லண்டன் அரை மரதனோட்டத்தில் மோ பராஹ் இல்லை

லண்டன் அரை மரதனோட்டத்தில் மோ பராஹ் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

by Staff Writer 06-02-2020 | 8:02 AM
Colombo (News 1st) புகழ்பெற்ற லண்டன் அரை மரதனோட்டத்தில், முன்னாள் ஒலிம்பிக் சம்பியனான இங்கிலாந்தின் மோ பராஹ் (Mo Farah) பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் உபாதைக்குள்ளாகியுள்ளமையே அதற்கான காரணமாகும். புகழ்பெற்ற லண்டன் அரை மரதனோட்டம் அடுத்த மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. இந்த மரதனோட்டத்தில் மோ பாரா பங்கேற்பது உறுதியாகியிருந்தது. எவ்வாறாயினும் உபாதை காரணமாக லண்டன் அரை மரதனோட்டத்தில் Mo Farah பங்கேற்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் நடத்தப்பட்ட லண்டன் அரை மரதனோட்டத்தில் Mo Farah சம்பியனாகியிருந்தமை சிறப்பம்சமாகும். மோ பாரா, 5000 மற்றும் 10 000 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் உலக சாதனையாளராக திகழ்கின்றார். 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் விழாவில் 2 தங்கப்பதக்கங்களை சுவீகரித்த வீரராகவும் Mo Farah பதிவாகியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விழாவில் தான் பங்கேற்கவுள்ளதாகவும் Mo Farah இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.