முறிகள் தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான அஜித் நிவாட் கப்ராலின் கருத்திற்கு எதிர்ப்பு

by Bella Dalima 06-02-2020 | 9:28 PM
Colombo (News 1st) எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் தயாரிக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கையும் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எவ்வாறாயினும், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறினார். இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பொலிஸ் விசாரணையை நடத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்தார். அஜித் நிவாட் கப்ராலின் நிலைப்பாடு தொடர்பில் இன்று பல்வேறு தரப்பினரும் கருத்து வௌியிட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியும் சட்ட மா அதிபரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் பாராளுமன்றத்தில் கூறினார். ஆனால், பிரதமரின் ஆலோசகரான அஜித் நிவாட் கப்ரால் அலரி மாளிகையில் இருந்து கொண்டு பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகிறார். அப்படியாயின், பிரதமர் ஒன்றைக் கூறுகிறார், பிரதமரின் ஆலோசகர் மற்றொன்றைக் கூறுகிறார். இது பந்து பரிமாற்றம் போல் இருக்கிறது
என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி செய்த முறிகள் மோசடியை மிகவும் சூட்சுமமான முறையில் பொதுஜன பெரமுன மீது சுமத்துவதற்கு முயற்சிக்கப்படுகிறது. கோப் குழுவின் முன்னாள் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியின் குழு அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் ரணிலின் பெயரோ வேறு அமைச்சர்களின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. இதனை முழுமையாக அதிகாரிகள் மீது சுமத்தி முறிகள் மோசடியை அதிகாரிகள் செய்த ஒன்றாக கோப் குழு மூலம் தெரிவித்தனர். கசக்கும் உண்மை என்னவென்றால் இவர்கள் ஊழலை மறைப்பதற்காக மாத்திரமே முயற்சித்தனர்
என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க குறிப்பிட்டார்.
நிவாட் கப்ரால் தம்மை மறைப்பதற்கு பயன்படுத்திய வௌ்ளைப் பட்டாடை கலைந்துள்ளது. உங்களது கருப்பு சரித்திரம் இன்று வௌியே வந்துள்ளது. இனிமேலும் நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம். நாட்டு மக்களுக்கு உண்மை புரிகிறது. எமது அரசாங்கத்திலிருந்த எவரேனும் இதனுடன் தொடர்புபட்டிருந்தால் அவற்றை மீண்டும் மூடிவைக்க வேண்டியதில்லை. விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறானவர்களை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர்
என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.
தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் அரசியல்வாதிகளுக்கு இடையே கருத்தாடல் ஏற்பட வேண்டிய அவசியம் இல்லை. கணக்காய்வுத்துறையில் புரிதல் உள்ளவர்களே அது தொடர்பில் விவாதிக்க வேண்டும். கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் எவ்வித களவும் ஊழலும் மோசடியும் இடம்பெறவில்லை. நான் இந்த துறை சார்ந்தவர் என்ற வகையில் கூறுகின்றேன். இலத்திரனியல் முறையில் அத்தகைய திருட்டு இடம்பெற்றால் உடனடியாக அது வௌிவரும்
என அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன கூறினார்.

ஏனைய செய்திகள்