முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரது விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 06-02-2020 | 2:02 PM
Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீன் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் சந்தேகநபர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. போலி உறுதிப்பத்திரத்தைத் தயாரித்து தலைமன்னார் பகுதியில் 2 காணிகளை விற்பனை செய்த மோசடியில் ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர், முறைப்பாட்டாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இந்த விடயத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல் தொடர்பான அறிக்கையை பெற்று விசாரணைகளை முன்னெடுப்பதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தது. மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள காரணிகளின் பிரகாரம், சந்தேகநபரை பிணையில் விடுவிப்பது முறைப்பாட்டின் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பிரதம நீதவான் தெரிவித்துள்ளார். இதன் பிரகாரம் பிரதிவாதி தாக்கல் செய்த பிணை மனுவை நிராகரித்த நீதவான், விளக்கமறியல் உத்தரவை நீடித்து உத்தரவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.