எயார்பஸ் விவகாரம்: கபில சந்திரசேன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜர்

by Staff Writer 06-02-2020 | 10:32 AM
Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், இருவரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்களை கைது செய்யவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்தார். ஶ்ரீலங்கன் விமான நிறுவத்தின் எயார்பஸ் ரக 10 விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்று அதனை அவுஸ்திரேலியாவிலுள்ள வங்கிக் கணக்கில் நிதி தூய்தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.