ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் விளக்கமறியல்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2020 | 3:52 pm

Colombo (News 1st) ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலியையும் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு கோரிக்கையை நீதவான் நிராகரித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று முற்பகல் ஆஜரான இவ்விருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ததையடுத்து, நீதிமன்றில் ஆஜர்படுத்தியது.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி ஆகியோரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க கடந்த திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்திருந்தார்.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் எயார்பஸ் ரக 10 விமானங்களைக் கொள்வனவு செய்ததில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்று, அதனை அவுஸ்திரேலியாவிலுள்ள வங்கிக் கணக்கில் நிதி தூய்தாக்கியமை தொடர்பில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வியெழுப்பினார்.

52 நாட்கள் அரசாங்கத்தின் போது பிரதம நிறைவேற்றதிகாரியாக செயற்பட்டவர், எயார் லங்காவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவ்வாறான நம்பிக்கை அரசாங்கத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என அநுரகுமார திசாநாயக்க வினவினார்.

இது தொடர்பான விரிவான தகவல்களை நாளைய தினம் வழங்க எதிர்பார்ப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் இடைத்தரகர் இலஞ்சம் பெற்றமைக்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டமையால் நாட்டிற்கு மேலதிக செலவு ஏற்பட்டது.

A350 ரக நான்கு விமானங்களை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டமையால், 99 மில்லியன் டொலருக்கும் அதிக நிதியை நட்ட ஈடாக செலுத்த வேண்டியேற்பட்டது.

உடன்படிக்கையை இரத்து செய்வதற்கான கொடுக்கல் வாங்கலுக்குரிய கொடுப்பனவிற்கு மேலதிகமாக, உரிய தரம் இல்லாத சில விமானங்களும் கொள்வனவு செய்யப்பட்டன.

இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அதிகாரிகள் மாத்திரம் தீர்மானம் எடுக்க முடியாது என பல தரப்பினரும் இன்று சுட்டிக்காட்டினர்.

இந்தத் தீர்மானத்திற்கு பின்னால் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்